பீகார் மாநில பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 முதல் 18ஆம் தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழாம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த கேள்வியில் பின்வரும் நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் என கேட்கப்பட்டிருக்கிறது.
அதில் சீனாவை சேர்ந்த மக்கள் சீனர்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற உதாரணம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி அந்த தேர்வு தாளில் இடம் பெற்றுள்ளது. இதனை அடுத்து நாடுகள் பற்றிய கேள்வியில் காஷ்மீரின் பெயர் இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விதான் பீகாரில் உள்ள ஹரியானா கிஷான்கன்ச் மற்றும் கதிஹார் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றி பள்ளி நிர்வாகம் தரப்பில் பேசும் போது இந்த கேள்விதாள் மாநில கல்வித் துறையிடமிருந்து வந்ததாகவும் இது கவன குறைவாக நடந்த பிழை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.