பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 29-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பீகார் தேர்தல் பிரச்சாரத்தை ஓட்டி அரசியல் கட்சிகள் வீடு வீடாக வாக்கு சேகரிக்க செல்லும் போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
80 வயதிற்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுனில் அரோரா குறிப்பிட்டார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும். கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.