சீனாவில் பிஎஃப் 7 வைரஸ் பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் அதிகம் உள்ள சீனா, ஜப்பான் போன்ற 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரில் புத்தகயாவில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், மீதமுள்ள இரண்டு பேர்களில் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் மியான்மரை சேர்ந்தவர் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து கயா மாவட்டம் மருத்துவ அதிகாரி டாக்டர் ரஞ்சன்சிங் கூறியதாவது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா தீவிரமானவை அல்ல என கூறப்படுகிறது. அதனால் நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் புத்தகயாவில் நடத்தப்படும் காலச்சக்கர பூஜைக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பங்கேற்கின்றார்கள். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கால சக்கர பூஜை டிசம்பர் 29-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க தீபத்திய புத்த மத குரு தலாய்லாமா புத்தகயா நகருக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.