பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மக்களின் நீதிமன்றத்தில் முதல் மந்திரி எனும் பெயரிலான இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்தபோது கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு வெளியே நின்று இருந்த ஒரு பெண் திடீரென்று விஷம் குடித்துள்ளார். அப்போது முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இதனை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் அந்த பெண்ணை பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
அதன்பின் அவரது பெற்றோரை அழைத்து அவர்களிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரெண்டு மனவ்ஜித் சிங் கூறியதாவது, பீகாரின் பாட்னா நகரில் நவுபத்பூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய அப்பெண் திருமணத்துக்கு பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரது கணவர் சிறையில் இருக்கிறார். முதல் மந்திரி நடத்திய மக்களின் நீதிமன்றம் நிகழ்ச்சி நடந்த பகுதிக்கு வெளியே திடீரென்று அவர் விஷம் குடித்து விட்டார். ஆனால் அவர் ஏன்..? இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.