பீட்சா கடையில் வேலைபார்த்த நபர் கூறிய பொய்யால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை 900 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீட்சா கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பீட்சா கடையில் வேலை பார்த்ததை மறைத்து பீட்சா வாங்க சென்றதால் கொரோனா தொற்று ஏற்பட்டது என்று பொய் கூறியுள்ளார்.
பீட்சா கடையில் வேலை பார்ப்பதாக கூறினால் கடையை மூடி விடுவார்கள் என்று நினைத்து போய் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவ்வளவு குறுகிய காலத்தில் கொரோனா பரவி விட்டதா என்ற அதிர்ச்சியில் தான் அவசரஅவசரமாக ஆறு நாட்களுக்கு தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வேலைபார்த்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருந்துள்ளதால், அவருடன் இந்த வாலிபர் இருந்ததாலேயே தொற்று பரவி உள்ளது என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனால் 6 நாட்கள் போடப்பட்ட இந்த ஊரடங்கு மூன்று நாளுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த தெற்கு ஆஸ்திரேலியாவின் மக்கள் இது தொடர்புடைய பீட்சா கடையின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். எனவே இந்த பீட்சா கடைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.