கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசிக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசிக் தனது நண்பரான பிரித்வி, உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா ஆகியோருடன் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு காரில் புறப்பட்டனர். இந்த காரை கவுசிக் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் வாலாங்குளம்-உக்கடம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கவுசிக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரித்வி, கனிஷ்கா நிவேதா ஆகிய மூன்று பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுசிக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.