உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தொடர் மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் 22 வயது இளம்பெண் ஒருவரை கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை வீடியோ எடுத்து அவரை மிரட்டியும் வந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் வரை தனது வீட்டில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த நபர் தொடர்ந்து மிரட்டி வந்த காரணத்தினால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அந்த நபரின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மிரட்டி புகாரை வாபஸ் பெறும்படி கூறியுள்ளனர். இதன்னால் பயந்துபோன அந்த பெண் சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.