பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் இந்திரா நகரில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.