வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் வெங்கடேசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ விற்பனையாளரான தனுஜா என்பவரிடமிருந்து 600 ரூபாய் மற்றும் செல்போனை திருடி செல்ல முயன்றார். இதனை பார்த்த தனுஜா சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை பிடிக்க முயன்றனர். அப்போது அச்சத்தில் செல்போனையும், பணத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்நிலையில் தனுஜாவும் அவரது உறவினர்களும் வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று உடைந்த செல்போனை சரி செய்து தரவில்லை என்றால் போலீசில் புகார் அளிப்போம் என கூறியுள்ளனர். இதனால் அச்சத்தில் வெங்கடேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.