திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வலசை பகுதியில் கந்தசாமி-செல்லாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குப்புசாமி என்ற மகன் உள்ளார். இவர்களிடம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான மணி, செல்வம் ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளனர்.
மேலும் புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஆணையம் சம்பவம் நடைபெற்ற அன்று கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சரவணன் என்பவருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. அதனை மனுதாரர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.