கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்தார்.
வரதட்சணை கோரி கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கொடூரமாக தன்னைத் தாக்கியதாக அந்தப் பெண் புகாரில் கூறியிருந்தார். அந்த நபரின் மனுவை விசாரித்த போது இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நீங்கள் எந்த வகையான மனிதர்? நீங்கள் அவரை கழுத்தை நெறிக்க முயன்றதாக உங்கள் மனைவி குற்றம் சாட்டுகிறார். உன்னால்தான் கருசிதைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உங்கள் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்? என்று அவரை சரமாரியாக கேள்வி கேட்டார்.
அந்த ஆணின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மாமியார்தான் மட்டையால் அடித்தார் என்று பெண் குற்றம் சாட்டியதாக நீதிபதி யிடம் கூறினார். உங்கள் தந்தை அல்லது நீ அவளை மட்டையால் அடித்து இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு பெண் ஒரு பெண்ணையே காயப்படுத்தியது மிகவும் கொடுமையான விஷயம். அதுவும் ஒரு வீட்டில் ஒரு பெண் காயமடைந்தால் அதற்கு அனைத்து பொறுப்புகளும் கணவனையே சாரும் என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.