புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டதால் ஒரு தொழிலாளி அடைந்த நன்மை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கேரள மாநிலத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் வேணுகோபால் என்ற நபர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். இதையடுத்து புகை பிடிப்பதற்கு அவர் செலவழிக்கும் பணத்தை குடும்பத்திடம் கொடுத்தால் அல்லது சேமித்தால் பிள்ளைகளும் நாமும் நன்றாக வாழலாம் என அவரது மனைவி வலியுறுத்தியுள்ளார். குடும்பத்தின் கஷ்டத்தையும் எடுத்துக் கூறி அவருக்கு புரிய வைத்தார்.
இதனை புரிந்து கொண்ட வேணுகோபால், புகைப்பிடிப்பதை கைவிட்டு, அவர் புகைபிடிக்க மட்டும் செலவழிக்கும் பணத்தை சேமித்து வைக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நாள் ஒன்றுக்கு அவர் புகைபிடிக்கும் பணத்தை மட்டும் சேமித்து வந்த அவர், கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை சேமித்து அவரது வீட்டின் மாடி பகுதியைக் கட்டி அதை தற்போது வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். புகைப் பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கத்திலிருந்து மீண்டால் நிறைய பணத்தை சேமித்து இவரைப்போல செல்வந்தர் ஆக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.