சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருதாவூரணி பகுதியில் வசித்துவரும் மூன்று குடும்பங்களில் தலா ஒருவர் வீதம் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் தேவகோட்டை ராம் நகர் காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்தனர். மேலும் கருதாவூரணி, பிரிட்டிஷ் காலனி ஆகிய தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியிலிருந்து வரும் ஆட்கள் தெருக்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. “கொரோனா பாதித்தவர்கள் தங்கியிருந்த இரண்டு தெருக்களுக்கும் சீல் வைக்கப்பட்டன”. பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கொரானாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் சுகாதார ஆய்வாளர் ராஜாமணி ராஜா கூறியுள்ளார்.