புதிய பாலகங்களை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கிராமங்களில் தொடக்க அளவில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநிலங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என 3 அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஆவின் பால் நிறுவனம் மூலமாக 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 29 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு வினியோகம் செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் ஆவின் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆவின் பொருட்களை மக்களிடம் வினியோகிக்கும் விதமாகவும், ஆவின் பயன்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைத்து விற்பனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்தப் பாலகங்களில் நெய், வெண்ணை, பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம், பன்னீர், குலோப் ஜாமுன், பால்பேடா, ரசகுல்லா, குக்கீஸ் போன்ற 82 வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதலாக பாலங்கள் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்திலும், அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் வளாகத்திலும் புதிய பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலகங்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்தார்.