வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டணம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான செல்வம் என்பவர் பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து செல்வத்தின் மீது விழுந்தது.
இதனால் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.