போலீசாருக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு சென்ற 2017 ஆம் வருடம் டிஜிபி அலுவலகம் வாயிலாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் பின்னர் போலீசருக்கு அடையாள அட்டை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்த அடையாள அட்டை காலாவதியாகி விட்டதாகவும் அதை தான் தற்பொழுது பயன்படுத்தி வருவதாகவும் போலீசார் புகார் தெரிவித்தார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் அடையாள வழங்கப்பட்டு அந்த அட்டையை தான் தற்போது வரை பயன்படுத்தி வருகின்றோம். பதவி நிலைக்கு ஏற்ப வழங்கப்பட்ட அடையாள அட்டை தற்போது பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. அடையாள அட்டையில் குறிப்பிட்டு இருக்கும் பதவியில் தற்போது யாரும் இல்லை. காவலர்கள் முதன்மை காவலர்களாகவும் முதல் நிலை காவலர்கள் தலைமை காவலர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். ஆகையால் அப்டேட் செய்து புதிய அடையாள அட்டை வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு பேருந்துகளில் மாவட்டத்திற்குள் சென்று வர போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்கள்.