இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மருத்துவமனைகளை தவிர பிற பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது .
அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகே அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்கள பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்களும், அரசு துறை ஊழியர்களும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வரவேண்டும்.
திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.