புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை வழங்கினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அது தொடர்பான விரிவான அறிக்கை மாநில அரசுக்கு கிடைத்த பின்னர், முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்து தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.