வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மற்றும் காரைக்கால், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மே 15ஆம் தேதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது புயலாக வலுப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆல் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை முதல் மிக கன மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.