லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் புதிய வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு அரசு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த 21 நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பிரிட்டனிலிருந்து மனைவி மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு என்ஜினீயர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் அவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இந்த நபருக்கு ஏற்பட்டுள்ளது புதிய கொரோனா வைரஸா அல்லது ஏற்கனவே பரவி வந்த கொரோனா வைரஸா? என்பது குறித்து அறிவதற்காக புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.