தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கினால் பாதிப்புகள் குறைந்து வருவதால் இந்த ஆலோசனைக்கு பிறகு சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், பாதிப்பு குறைவாக இருக்கும் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கலாம். சிறிய நகை கடைகள் ஜவுளி கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. சிறிய வழிபாட்டுத்தலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் திறக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் நிலையில் இந்த முறை அதற்கான கால அளவு நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.