பல்வேறு மாதங்கள் பரிசீலனை செய்த பின் தொழிலாளர் நலன் குறித்த 4 கொள்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் பன்னெடுங்காலமாகவுள்ள விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்யும் விதமாக இந்த முயற்சியை அரசு மேற்கொண்டு உள்ளது. புது தொழிலாளர் நலகொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இடம்பெறவுள்ளது. அதாவது ஊழியர்களின் சம்பளம் , பிஎப் திட்டத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் பணிநேரம் ஆகியவற்றில் மாற்றம் வரவுள்ளது. ஊழியர்களின் பணிச்சூழல், தொழிலாளர் நலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படவுள்ளன. இச்சட்டங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏராளமான நிறுவனங்களில் அதிக நன்மைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் நலக்கொள்கைகளில் இடம்பெறும் மாற்றங்கள் என்னென்ன?
தொழிலாளர் நலசட்டங்களில் இடம்பெறவுள்ள முக்கியமான திருத்தம் என்னவெனில் பணி நாட்கள் தான். புது விதிகள் நடைமுறைக்கு வந்ததும், தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்குப் பதில் 4 வேலை நாட்கள் என்ற முறையை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த முடியும். அந்த வகையில் 3 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும். எனினும் இதில் ஒரு நிபந்தனை உண்டு. வாரத்தில் 3 தினங்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணிநேர பணிக்குப் பதில் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். இந்த விதிமுறையானது அனைத்து தொழில் நிறுவனத்துக்கும் பொருந்தக்கூடியது ஆகும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் முன்பே அமலிலுள்ள விதிமுறைகளை பொருத்து இது மாறும்.
பிஎப் பங்களிப்பு மற்றும் டேக் ஹோம் சேலரி
ஊழியர்களுக்கு அனைத்து பிடித்தமும்போக கைக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் பிஎப் திட்டத்திற்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது. நிகரஊதியத்தில் 50 % அளவுக்கான அடிப்படை ஊதியம் இருத்தல் வேண்டும் என புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இதன் வாயிலாக பிஎப் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை அதிகரிக்கும். இதன் காரணமாக ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் ஓய்வுபெறும்போது கிடைக்கும் பிஎப் தொகை மிக அதிகமாக இருக்கும்.
ஆண்டு விடுப்புகள்
தன் பணிக்காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் குறித்த விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக ஓராண்டில் எஞ்சி இருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக்கொள்வது, அதிக விடுப்பு பெறுவது ஆகிய தளர்வுகள் செய்யப்பட இருக்கிறது. இதனிடையில் சேவை துறையில் வொர்க் பிரம் ஹோம் கலாசாரத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் ஓராண்டில் 180 தினங்கள் பணி செய்திருந்தாலே புது ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்படவுள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் அமல்?
உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப்பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த வரைவு கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.