Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய புயல்… தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல், இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் நாள் தென்தமிழக கரையை அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செவ்வாயன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. புதனன்று கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் அதிக மழையும், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழனன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் டிசம்பர் 2ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை எட்டரை மணி முதல் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவு சேலம் மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |