தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு தொடங்கியுள்ளதாக கடந்த சில நாட்களாக விவாதம் எழுந்து வருகின்றது. சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனைப் பற்றிய வெளியிட்ட குறிப்புகளில் கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், அது மட்டுமில்லாமல் வானதி ஸ்ரீனிவாசன் மகளிரணி தலைவர் ஆனதும், அண்ணாமலை பாஜக தலைவர் ஆனதும் எல்லாமே கொங்கு மண்டலத்தில் வைத்துதான் என்று கூறப்பட்டது. இதனால் கொங்குநாடு விவகாரம் டுவிட்டரில் ட்ரெண்டாகி வந்தது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டை பிரிக்கமுடியாது அப்படி பிரித்தால் தமிழ்நாடு தனிநாடாக மாறும் என்ற ஆக்ரோசமான பதிவுகளையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நான்காவது குறிப்பில் தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தை பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநில மறுசீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தில் புதிய மாநிலமாக கொங்கு நாடு என்று உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.