மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று 200 மடங்கு அதிவேகமாகப் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் XE வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
இவர் புதிய வகை கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பிறகு கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும், மருந்துகள் சரியான முறையில் கிடைக்கிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.