நிவர் புயல் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது கடல் சீற்றமாக இருப்பதால் அரசு அறிவுறுத்தலை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்த திரு. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அரசுத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கடல் வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீன் பிடிக்க சென்றவர்கள் எல்லாம் கரைக்கு வர -வழைக்கப்பட்டுள்ளனர். இதனால் படகுகள் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் அணிவகுத்து நிற்கின்றன. புயலை எதிர்கொள்ள மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புயல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.