புதுச்சேரி மாநிலத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பை 100 பேருடன் நடத்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில திரைப்பட நிறுவனங்கள், புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்
அந்தவகையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் ‘காத்துவாக்குல 2 காதல்’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கிவருகிறார்.இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் விஜய் சேதுபதி, முதலமைச்சர் ரங்கசாமியை நேற்று (ஆக.19) மாலை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
அப்போது, புதுச்சேரி நகராட்சி சார்பில் படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது உயர்த்தப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ. 28ஆயிரமாக வசூலிக்கப்படுகிறது. இதனை குறைக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார், விஜய் சேதுபதி. மேலும் இதனால் சிறு பட்ஜெட் படங்களின் நிலைமை பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.