புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இது குறித்து நாராயணசாமி பேசியதாவது “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் ரூபாய்.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால் இவற்றில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டுவர எவ்விதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. சென்ற காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் கூறப்படுகின்றன. கடந்த வருடம் முதல்வர் கூறிய அம்சங்களும் இதில் வந்துள்ளது.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு மிக குறைவாக உள்ளது. கல்வியை பொறுத்தவரை கடந்த வருடம் கொடுத்த திட்டங்களை தவிர்த்து புதியதாக ஒன்றுமில்லை. பள்ளிகள், கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான நிதியானது மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதலவர் ரங்கசாமி 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளார். முன்பே காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டபோது, அதை கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். ஆகவே இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல. அத்துடன் சைக்கிள் கொடுக்கும் திட்டத்தையும் நாங்கள் கொண்டு வர முயற்சித்தோம்.
ஆனால் அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இந்த திட்டம் பயன்படும் என்பதால் எதிர் கட்சியாக இருந்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். முதல்வர் அரசின் எந்த உதவிகளையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 21-55 வயதுவரை இருக்கின்ற குடும்ப பெண்களுக்கு ரூபாய்.1,000 கொடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இவற்றில் 5 % பேர்தான் பயனடைவார்கள். 95 % பேருக்கு இதனால் பயனில்லை.
இத்திட்டம் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகிற திட்டம் ஆகும். பிரதமரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து ரூபாய்.2 ஆயிரம் கோடி நிதிகொடுக்க வேண்டும் என கேட்டார். எனினும் மத்திய அரசிடமிருந்து அவருக்கு சாதகமான பதில் எதுவும் வரவில்லை. பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் ஒரு புறம் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதே சமயம் மற்றொருபுறம் நிதி கொடுப்பதில்லை. ஆகவே ரங்கசாமியை பா.ஜ.க ஆட்டிப் படைக்கிறது” என்று கூறினார்.