Categories
தேசிய செய்திகள்

புதுபொலிவுடன் தயாராகும் அயோத்தி ரயில் நிலையம்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ள நிலையில், அந்நகரத்திலுள்ள ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ஜூன் 2021க்குள் முழுமைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 5) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.இந்த பிரமாண்ட விழாவிற்கு நாடு தயாராகி வருவதையொட்டி, அயோத்தியின் ரயில் நிலையத்தை மறுவடிவமைக்கும் பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இது குறித்து ரயில் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராமர் கோயிலின் கட்டுமானம் 2023-24ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால், புதிதாக உருவாகவுள்ள ரயில் நிலையத்திற்கான பட்ஜெட் ரூ. 80 கோடியிலிருந்து ரூ.104.7யாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தின் பணிகளை ஜூன் 2021க்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அயோத்தி புதிய ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படங்களை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், “ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு அயோத்தி ரயில் நிலையத்தை மறுவடிவமைத்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ரயில் நிலையம் இரண்டு தளங்களாக உருவாகிறது. இதில் முதல் தளத்தில் ரயில் பிளாட்பார்ம் விரிவாக்கப்படவுள்ளது. இரண்டாவது தளத்தில் பயணிகள் தங்குமிடம், டிக்கெட் விற்பனை இடம், கழிப்பறை போன்றவை நவீன வசதிகளுடன் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |