திருப்பத்தூர் புதுப்பட்டி அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது. 108 கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம், வருஷாபிஷேக ஹோமம், லிங்கோத்பவ பூஜை நடைபெற்றது. பதினாறு முகங்கள் கொண்ட சோடஷ லிங்கத்துக்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சாமி சன்னதிக்கு வந்தனர். கடந்த 2-ஆம் தேதி முதலே இதற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்துள்ளனர். கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட பால் குடத்திலிருந்து சாமிக்கு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.