தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள்.
இதுவரை 2, 3 மற்றும் நான்காம் வருடத்தில் படிக்கும் மாணவிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயனடையும் விதமாக இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூலமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.