தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த முகாமில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பதிவேடுகள், முகாமில் பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது “இதுவரை தேனி மாவட்டத்தில் 39 கல்லூரிகளில் 1196 மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே கல்வி நிர்வாகம் இந்த வாய்ப்பினை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தங்களுடைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் முதற்கட்டமாக விண்ணப்பிக்க தவறிய 2, 3மற்றும் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகளின் விண்ணப்பத்தை இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.