டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேசிய கெஜ்ரிவால், “புதுவிதமான தேர்தல் அரசியலுக்கு டெல்லி மக்கள் வழி வகுத்துள்ளனர். அதுவே வளர்ச்சிகான அரசியல், வளர்ச்சியை முன்னிறுத்தியே நாட்டின் எதிர்கால அரசியல் இருக்கும். பள்ளிகள், மருத்துவ வசதிகள், தண்ணீர், மின்சாரம், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு டெல்லி மக்கள் முக்கியத்துவம் அளித்ததன் மூலம் புதுவிதமான அரசியலுக்கு வழிவகுத்துள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவரால் வர முடியவில்லை. டெல்லியின் வளர்ச்சிக்காக அவரின் ஆசீர்வாதத்தை எதிர்நோக்கியுள்ளேன். பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்தால்தான் நாட்டுக்கு பெருமை” என்றார்.