புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் ஆபாச படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கூவத்தூர் காரன் குப்பத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக், சமையல் வேலை செய்து வருகிறார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து ஆசை காட்டி மாணவியை காதல் வலையில் விழவைத்த கார்த்திக், வற்புறுத்தி ஆபாச புகைப்படங்களை பெற்று செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனை பயன்படுத்தி மாணவியை தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
பணத்தை தரவில்லை என்றால் புகைப்படத்தை பகிர்ந்து விடுவேன் எனக் கூறி விளக்கியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த மாணவி தந்தையிடம் புகார் தெரிவிக்கவே அவர் திருப்புவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்போன் எண்ணை கொண்டு கார்த்தி கூவத்தூரில் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று அவரை கைதுசெய்தனர். இதனிடையே விசாரணையில் இவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட பெண்களை பேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்தது தெரிய வந்தது .