தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, தமிழகத்தில் முதல்வர் அவர்களால் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தங்களுடைய செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து கொள்ளும் விதமாக www.tnpds.gov.in என்ற இணையதளம் இலவசமாகவே இயங்கி வருகிறது.
அதனடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வார காலத்திற்கு ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு இ- சேவை மையங்களிலேயே உரிய ஆவணத்தோடு புதிய குடும்ப அட்டைகள் வேண்டி இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் 60 ரூபாய் ஆகும். ரேஷன் அட்டை தொடர்பாக தனியார் இணையதள சேவை மையங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூன்றாம் நபர்கள் யாரையும் நம்பி தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.