புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டஸ் என்பவர் சென்ற மாதம் 16ஆம் தேதி விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரின் உடலை உறவினர்கள் தாய், தந்தையை அடக்கம் செய்த கல்லறை தோட்டம் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இவரின் சகோதரர் கிறிஸ்டோபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் குடும்பத்தினர்கள் அவரின் எதிர்ப்பை மீறி அங்கேயே அடக்கம் செய்தார்கள்.
இந்நிலையில் 18 நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் கிறிஸ்டோபர், அவரின் மனைவி ரீனா, உறவினர்கள் ராஜூ, சுரேஷ் உள்ளிட்டோர் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்தார்கள். சொத்து விவகாரம் காரணமாக உடலை அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் எதிர்ப்பையும் மீறி உடலை தோண்டி எடுத்து இறந்தவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய முயன்றார்கள். இதுகுறித்து இறந்தவரின் மனைவி மற்றும் மகனுக்கு தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் கிரிஸ்டோபர் அவர்களை மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. பின் அவர்களை வெளியேற்றி விட்டு அடக்கம் செய்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தியும் கிரிஸ்டோபர் தரப்பினர் சமரசம் ஆகவில்லை. இதையடுத்து புகாரின்பேரில் கிரிஸ்டோபர், ரீனா, ராஜூ, சுரேஷ் உள்ளிடோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.