சென்னை மாவட்டத்தில் புழல் பகுதியில் மாரி பவானி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை அடுத்து பவானி மீண்டும் கர்ப்பமானார். இவருக்கு கடந்த 11ஆம் தேதி ஆர். எஸ். ஆர். எம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் குழந்தையின் உடலை செங்குன்றம் பகுதியில் உள்ள கிராண்ட் லைன் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர்.
இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் குடியிருப்பு பகுதியில் குழந்தையின் உடலை புதைத்தது தவறு எனக்கூறி பொதுமக்கள் தரப்பில் போலீஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் நேற்று மாலை குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் மீண்டும் புதைக்கப்பட்டது. அந்த சமயத்தில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என அனைவரும் உடன் இருந்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.