புத்தகத் திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா வளாகம் அமைந்துள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகம் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 400 பள்ளிகளை சேர்ந்த 5,000-த்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கிடையே புத்தகம் வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் 20 திருக்குறளை வாசித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார்.
இவர் மாணவ-மாணவர்களிடையே புத்தக வாசித்தலை ஊக்குவிப்பதற்காக திருக்குறள் வாசிக்கும் போட்டி நடைபெற்றது என்றும், மாணவர்களின் வாசித்தல் திறனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறினார். அதன் பிறகு மாணவ-மாணவிகளுக்காக கட்டுரை போட்டி, இலக்கியப் போட்டி, அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும் எனவும் கூறினார். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு புத்தகங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடைபெறும் எனவும், ஜூலை 31-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.