ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினமான இன்று பல கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாபை சேர்ந்த பக்தர்கள் 12 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.