புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடந்தது தொடர்பாக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
புத்தாண்டு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
அதன்படி ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர தமிழகமெங்கும் அமைதியான முறையில் மகிழ்ச்சியுடனும் நடந்து முடிந்தன. கடந்த 31ஆம் தேதி அன்று காவல்துறை வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.