ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீட்டிலிருந்த படியே புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணியிலுள்ள புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் கூடிநின்று புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதற்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே புத்தாண்டை கொண்டாட வேண்டுமென பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையடுத்து கடற்கரைக்கு செல்லக்கூடிய மேரிஸ்பார்க், ஆரிய நாட்டுத்தெரு, உத்திரிய மாதா கோவில் தெரு, தெற்கிலிருந்து வரக்கூடிய பாலம் உள்ளிட்ட பாதைகளில் காவல்துறையினர் இரும்பு தடுப்பு வைத்து அடைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தடைகளை மீறி கடலில் குளித்தவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.