இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி புத்தாண்டை குடும்பத்துடன் வீட்டிலிருந்து கொண்டாட வேண்டும். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பாதுகாப்பு பணிகளுக்காக 90 ஆயிரம் காவல் துறையினர், பத்தாயிரம் ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு நாட்களும் கடல் நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். தமிழக முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். இதனால் யாரும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. இதனை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். இரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுவெளியில் சிறப்பிக்க அனுமதி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் மணல் பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு என்றாலே மணலில் கொண்டாடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.