மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பங்குத்தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கல் நரசாகுளம் பகுதியில் ஜான்சன் மரிய ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் புனித சவேரியார் தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஜான்சன் பங்கேற்றார். அதன்பிறகு ஜான்சன் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ஜான்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜான்சனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்.