புனே, சத்தாராவில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,” மேற்கு மராட்டியத்தில் உள்ள புனே, கோலாப்பூர், சத்தாரா மற்றும் சாங்கிலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுள் குறிப்பாக சத்தாரா மற்றும் புனே மாவட்டத்தில் மிக அதிக கன மழை பெய்யும். வடக்கு, மத்திய மற்றும் விதர்பா மண்டலங்களில் வரும் வியாழக்கிழமை வரை பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று கூறியுள்ளார்.