தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது.
அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லவும், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் சேது விரைவு ரயில், இன்று மண்டபத்துடன் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.