தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து உருவான நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறிய பின்னர் மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, கடலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நிவர் புயல் புதுச்சேரி பகுதியில் இரவு 11.30 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரை முழுவதுமாக கரையை கடந்துள்ளது.
அப்போது புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியத்துடன் கன மழையும் கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடந்தததையடுத்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரி அருகே இரவு 11 மணி முதல் காலை அதிகாலை 2 மணி வரை புயல் கரையை கடந்தது. ஆனாலும் இந்த புயல் தற்போது வரை தமிழகத்தில் உள்ள பகுதியில்தான் இருக்கிறது. காற்று மற்றும் மழை தொடரும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில பகுதிகளில் மேலும் கனமழை தொடரும். இந்த தீவிர புயல் அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறி இன்று அதிக மழை பெய்யும் ” என்று கூறியுள்ளார்