வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. அதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கரையோர மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புயல் கரையை கடந்த போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனை சரிசெய்யும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு நிவாரண பணிகளுக்கு பிரதமர் மோடி ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதில் ஒடிசாவுக்கு 500 கோடியும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.