Categories
விவசாயம்

புயல் வந்தாலும் சாயாத வாழை…. இயற்கை விவசாயத்தில் வெற்றிகண்ட பெண்….

செயற்கை உரம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் சாதித்து வெற்றி காணும் கரூரை சேர்ந்த பெண் விவசாயி.

கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்து லிங்கமநாய்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு இயற்கை வளங்களோடு வசித்து வருபவர் சரோஜா. விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கடவூரில் உள்ள நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியை பெற்றார். நாம்மாழ்வாரின் ஆலோசனையின்படி நந்தவன தோட்டத்தை 20 ஏக்கர் நிலத்தில் உருவாக்கி மிளகாய், வெங்காயம், முருங்கை, உளுந்து, துவரை, பப்பாளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கேயம், மணப்பறை போன்ற மாடுகள் இருக்கிறது. அதனுடைய சாணமும், கோமியமும் தண்ணீரில் கரைத்து விடுவதோடு சரி, பூச்சிகொல்லி எதுவும் பயன்படுத்துவது இல்லை. நாங்கள் இதுபோன்ற கலப்பு பயிர்கள் செய்வதினால் ஒன்று விலை குறைந்தாலும் மற்றொன்று விலை அதிகரித்து விடும். அதுமட்டுமல்லாமல் இயற்கை விவசாயம் என்பதால் எல்லாரும் மகிழ்ச்சியாக தேடி வந்து பொருட்களை வாங்குகிறார்கள்.

கரூர் மாவட்டம் பொதுவாகவே வறட்சியாக காணப்படும் நிலையில் தன் நிலத்தில் உள்ள கிணற்று நீரை பயன்படுத்தி மூடாக்கு முறையில் பயிரிட்டு வருகிறார். விவசாயிகளிடம் இருந்து முருங்கைக்காய் கொள்முதல் செய்யும் சரோஜா அதன் விதையில் இருந்து எண்ணெய் தயார் செய்து 100மிலி இருந்து 500-மிலி வரை விற்பனை செய்து வருகிறார். முருங்கை விதை விலை குறையும் போது எல்லாரும் கவலை படுவார்கள். ஆனால் நாங்கள் மரத்திலேயே விதைகளை காய வைத்து எண்ணெய் ஆக்கி 100மிலி 500 ரூபாய் என்று கொடுக்கிறோம். நிறைய மருத்துவகுணம் உள்ள எண்ணெய் அது. இதுபோன்று மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயத்தை தன்னிறைவுடன் செய்து வருகிறோம். பலமுறை உணவுக்காடு என்ற திட்டத்தை தோற்றுவித்த இவர் 500க்கும் மேற்பட்ட வாழைமரங்களை நடவு செய்துள்ளார். அவற்றில் ஊடு  பயிராக அத்தி, நாவல், கொய்யா, மாதுளை என பல்வேறு வகையான பழ மரங்களை நடவு செய்து வளர்த்து வருகிறார்.

இதனால் கஜா புயலில் போது வீசிய பலத்த காற்றிலும் ஒரு வாழைமரம் கூட சாயாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் என சரோஜா கூறுகிறார். விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் மாட்டுசாணம் போன்றவற்றையே உரமாக பயன்படுத்தி வரும் இவர் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். இதுவரையில் 10,000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். விவசாம் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கிறார்கள். குறைந்த அளவில் நீரை வைத்து செயற்கை உரங்கள் எதுவும் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்வது போன்ற பயிற்சி அளிக்கின்றனர். விவசாய நிலங்களை பணம் பார்க்கும் நிலமாக பார்க்காமல், அவை கொடுப்பதை பெற்று கொண்டு வாழ்வதே நாம் இயற்கைக்கு செய்யும் நன்றி என இயற்கை விவசாயி சரோஜா குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |