Categories
Uncategorized மாநில செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்….. மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும்…. ஓபிஎஸ் அறிக்கை..!!

அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மனதில் நிலை நிறுத்தி “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற லட்சியத்துடன் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு, நதிநீர் இணைப்பு, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு ஆதரவாக பலத்தை சேர்த்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்..

தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற கனவோடு பல்வேறு புரட்சிகரமான மக்கள் நலத்திட்டங்களை அளித்து தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக ஆக்கி அதன் மூலம் வேளாண்துறை, உற்பத்தி துறை, சேவை துறை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்று தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றி காட்டி தன் வாழ்நாளையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து மண்ணை விட்டு விண்ணுலகுக்கு சென்றாலும், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கழக காவல் தெய்வம், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 6- ஆம் ஆண்டு நினைவு நாளான 05.12.2022 திங்கட்கிழமை காலை 10:30 மணியளவில் சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

இதன் தொடர்ச்சியாக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள், இதனைத் தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்.

மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநில கழக நிர்வாகிகள் அனைவரும் 05.12. 2022 அன்று ஆங்காங்கே மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது..

Categories

Tech |