கோவிலின் கதவு திறக்கபடாத நிலையிலும் கருவறையின் முன் கதிரவனின் ஒளி விழுந்ததை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனந்த சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாளை பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர் . மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி ஆரம்பத்தில் மாலை நேரம் கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு காட்சியளிக்கும் பெருமாளின் உடல் மீது விழும் வகையில் இந்த கோவிலானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது புரட்டாசி மாதம் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை மாலை நேரத்தில் மறையும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோவிலின் கருவறை வரை பாய்ந்து செல்லும் அதிசயம் நடைபெறும்.
தற்போது அந்த கோவிலில் சீரமைக்கும் பணிகள் நடந்தேறி வருவதால் கருவறையின் முன்புறம் உள்ள உதயமார்த்தாண்ட மண்டபத்தின் வாசல் கதவு திறக்கப்படுவதில்லை. இருப்பினும் கதிரவனின் ஒளியானது மாலை நேரங்களில் அந்தக் கதவில் விழுந்துள்ளது. அதாவது மாலை நேரத்தில் மறையப் போகும் கதிரவனின் மஞ்சள் நிற கதிர்கள் கருவறையின் முன்புறம் பாய்ந்து உதயமார்த்தாண்ட மண்டப பகுதியில் விழுந்துள்ளது. இதை கண்ட பக்தர்கள் பேரின்பம் அடைந்தனர். மேலும் இந்த அபூர்வ காட்சியை இன்று மாலை 6 மணி அளவில் காணலாம் என கூறப்படுகிறது.